Sangathy
News

டயானா கமகே உள்ளிட்ட மூவரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி

Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், டயானா கமகே உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பில் பங்குபற்ற முடியும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

சபாநாயகரின் அனுமதியுடன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாத்திரம் அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தர முடியும் என  அஜித் ராஜபக்ஸ  குறிப்பிட்டுள்ளார். 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்றம் இன்று முற்பகல் அனுமதி வழங்கியது. 

குறித்த தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று  மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கு ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பதற்கு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு பரிந்துரைத்திருந்தது. 

குறித்த தீர்மானத்திற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக, சபை முதல்வரும் அமைச்சருமான கலாநிதி சுசில் பிரேமஜயந்த, அதனை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். 

இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 

டயானா கமகேவிற்கு மூன்று மாத கால பாராளுமன்ற தடையும், ஏனைய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா இரண்டு வார கால பாராளுமன்ற தடையும் விதிக்கப்பட வேண்டுமென சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்திருந்தது. 

இதனையடுத்து, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாத நிலைமை ஏற்பட்டது. 

இதன்போது, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வாக்கெடுப்பை கோரிய நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வௌியேறினர். 

வாக்கெடுப்பின் போது பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக 57 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் குறித்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். 

மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 
 

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை வகுக்குமாறு இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் குழு கோரிக்கை

Lincoln

COPA frowns on FEB’s failure to take prompt action against errant official

Lincoln

யுக்திய சுற்றிவளைப்பில் இதுவரை 7,700 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy