Sunday, September 22, 2024
Homeதாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்.. பின்வாங்கும் ஹிஸ்புல்லா : மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்.. பின்வாங்கும் ஹிஸ்புல்லா : மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

கோலன் சிகரம் [Golan Heights]

லெபனான் மற்றும் ஜோர்டான் நாட்டு எல்லையில் 1200 சதுர கிலோமீட்டர்களுக்குப் பரந்து விரிந்து கிடக்கும் பிரதேசம் கோலன் சிகரம் [Golan Heights] . இதன் பகுதிகளைக் கடந்த 1981 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அங்கு வாழ்ந்து வந்த சிரியன் மற்றும் பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றிவிட்டு, தங்களது மக்களை இஸ்ரேல் அரசு அங்கு குடியேற்றம் செய்தது. அங்கு வாழும் மக்கள் சிரிய நாட்டில் வசித்தாலும் இஸ்ரேலிய குடியுரிமை கொண்டவர்கள் ஆவர்.

கால்பந்து மைதான தாக்குதல்

லெபனான் இஸ்ரேல் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தற்போது சிரியாவில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொந்தளிக்கும் இஸ்ரேல்

இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பெரிய விலையை கொடுத்தாக வேண்டும் என்று கொந்தளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, தனது அமெரிக்க பயணத்தை அவரச அவசரமாக முடித்துக்கொண்டு இஸ்ரேல் திரும்பியுள்ளார். இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு எதிரிவினையாற்றி தக்க பதிலடி கொடுப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்க பிரதமர் நேதன்யாகுவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முழு அதிகாரத்தை தந்துள்ளது. எந்த நேரத்தில் எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்று நெதன்யாகுவே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மற்றொரு போரை நேதனயாகு தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பின்வாங்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் பழிவாங்கும் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்- லெபனான் எல்லையின் தெற்குப் பகுதிகள் மற்றும் அமைப்பு வலுவாக இருக்கும் பெக்கா பள்ளத்தாக்கில் இருந்தும் [Bekaa valley] ஹிஸ்புல்லா பின்வாங்கியுள்ளது என்று எல்லைப்புற செய்திகள் தெரிவிக்கின்றன.

இரான் – துருக்கியே அறைகூவல்

லெபனானுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் ஒரு முழுமையான போரில் இஸ்ரலை இரான் எதிர்த்து நிற்கும் என்று அந்நாட்டு சார்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மற்றொருமத்திய கிழக்கு நாடான துருக்கியே நாட்டின் அதிபர் தாயிப் எர்தோகான் நேற்று அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் செய்து வரும் வெறுக்கத்தக்க நடவைக்கைகளை பார்த்து நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்.

அவசியம் ஏற்பட்டால் இதற்கு முன்னதாக லிபியா மற்றும் அஜர்பைஜானின் நாகோர்னோ- காராபாக் [Nagorno-Karabakh] பகுதிகளில் நுழைந்ததுபோல் துருக்கியே இஸ்ரேலுக்குள்ளும் நுழையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

பாலஸ்தீன இஸ்ரேல் போர்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 க்கும் அதிகாமானோர் கொல்லப்பட்டனர். பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச்செல்ப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி பாலஸ்தீனத்தின் காசா, ரஃபா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39,324 பேர் உயிரிழந்துள்ளனர். 90,830 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

போர் பதற்றம்

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதிகளும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனத்துடனான இந்த போர் மொத்த மத்திய கிழக்குக்கு எதிரான போராக மாறும் வாய்ப்புகள் தென்படத் தொடங்கியுள்ளது உலக அரசியலில் நடுக்கத்தை ஏற்படுத்தியள்ளது.

தூங்கும் அமைதிப் பேச்சுவார்த்தை

போரை நிறுத்த ஐநா மற்றும் அமெரிக்க நாடுகளின் முயற்சிகள் எதுவும் தற்போதுவரை பலனளிக்கவில்லை. ஒரு புறம் போரை நிறுத்தவும், மறுபுறம் இஸ்ரேலுக்கு நிதி வழங்கி வருகிறது. தற்போது நடந்துள்ள ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இஸ்ரலின் பாதுகாப்பை இரும்புக்கரம் கொண்டு உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments