ஹோர்மூஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளைப் பதித்திருப்பதாக வெளியான வரைபடம், உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தத் தகவல் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய ‘இஸ்னா’ மற்றும் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனங்கள் நேற்று ஒரு வரைபடத்தை வெளியிட்டன. அதில், பாரசீக வளைகுடாவின் நுழைவு வாயிலான ஹோர்மூஸ் ஜலசந்தியில், கப்பல்கள் வழக்கமாகப் பயணிக்கும் பாதையை ‘ஆபத்தான பகுதி’ என பாரசீக மொழியில் ஈரான் குறிப்பிட்டுள்ளது. இதனால் அங்கு கடல் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என உலக நாடுகள் சந்தேகிக்கின்றன.
இந்த விவகாரத்தில் ஈரான் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:
போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைப்படி, ஹோர்மூஸ் நீரிணை வழியாக தினமும் 15 சரக்குக் கப்பல்கள் செல்ல மட்டுமே ஈரான் அனுமதி வழங்கும்.
ஈரானால் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட பாதையில் மட்டுமே கப்பல்கள் பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், போருக்கு முன்பு இருந்தது போன்ற தடையற்ற கப்பல் போக்குவரத்து இனி சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது.
உலகின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்தப் பகுதி வழியாகவே நடைபெறுகிறது. ஈரானின் இந்தத் திடீர் கட்டுப்பாடுகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது
இந்தக் கட்டுப்பாடுகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
