பாடகர் சங்கீத்சன் தொடர்ந்து சமூக மாற்றத்தை நோக்கிய எழுச்சிப் பாடல்களைப் பாட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்த விசேட அறிவிப்பை விடுத்தார்.
கடந்த ஒரு வார காலமாக நாட்டில் விசேடமாகப் பேசப்பட்டு வந்தவரும் அரசியல் ரீதியாக பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தவருமான பாடகர் சங்கீத்சனின் விடுதலை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலமாகவே சாத்தியமாகியுள்ளது.
“சங்கீத்சன் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது தாயார் அடைந்த வேதனையை என்னோடு பகிர்ந்து கொண்டார். தந்தை இல்லாத அந்த குடும்பத்தில், சந்தையில் வியாபாரம் செய்து மிகவும் கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தவர் அந்தத் தாய். ஆனால், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு சில அரசியல் பின்னணி கொண்ட சட்டத்தரணிகள், சங்கீத்சன் ஊடாகத் தங்களது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றனர்.
அவர் தொடர்ந்து சமூக மாற்றத்தை நோக்கிய எழுச்சிப் பாடல்களைப் பாட வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தின் எதார்த்த நிலையைத் தனது பாடல்கள் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.
வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளும், காணாமல் போனவர்களின் குடும்பங்களும் அதிகம் உள்ளனர். அவர்களின் துயரங்களை உலகறியச் செய்யச் சங்கீத்சன் தனது குரலைப் பயன்படுத்த வேண்டும் – என்றும் கூறியுள்ளார்.
