ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பெப்ரவரி இறுதியில் தாக்குதலை தொடங்கின. இந்த போர் 38 நாட்கள் நடைபெற்றது. அதன் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 வார கால போர்நிறுத்தத்தை அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அது மேலும் தெரிவித்துள்ளதாவது –
ஈரானில் மொத்தம் 13,000 இற்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கினோம். ஈரான் போரில் 1,000 இற்கும் மேற்பட்ட தொமஹக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இது அமெரிக்க இராணுவம் ஒவ்வோர் ஆண்டும் வாங்கும் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம். ஒரு தொமஹக் ஏவுகணையின் விலை 3.6 மில்லியன் டொலர்.
இவை தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் படைத்தவை. ஈரான் போரில் 1,000இற்;கும் மேற்பட்ட தொமஹக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதால், அமெரிக்காவின் தொமஹக் ஏவுகணையின் கையிருப்பு 3ஆயிரமாகக் குறைந்துள்ளது. இதேபோல், எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க 1,200 பட்ரியாட் ஏவுகணைகளை ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது.
இதன் விலை 4 மில்லியன் டொலருக்கும் அதிகமாகும். கடந்தாண்டில் 600 பட்ரியாட் ஏவுகணைகளை மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்தது. மேலும், வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் 1,100 ஜஸ்மர் ஏவுகணைகளையும் அமெரிக்க ராணுவம் ஈரான் போரில் பயன்படுத்தியது. இதன் காரணமாக இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்க இராணுவத்தில் தற்போது 1,500 மட்டுமே இருப்பில் உள்ளது. இது 600 மைல் தூரமுள்ள இலக்குகளைத் தாக்கும். இதன் விலை 1.1 மில்லியன் டொலர்.
1,000இற்கும் மேற்பட்ட ஏடிஏசிஎம்எஸ் என்ற தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது. இவ்வாறு அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
ஈரான் போர் காரணமாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களில் ஆயுத கையிருப்பு குறைந்துள்ளது.
ஈரானின் விலை குறைந்த டிரோன் தாக்குதலை சமாளிக்க, அமெரிக்கா அதிக விலையுள்ள பட்ரியாட் ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. காலியான ஆயுதங்களை மீண்டும் வாங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு நீண்ட நாட்களாகும் எனத் தெரிகிறது.
