ஆசிய இளையர் சுவர்ப்பந்துப் (ஸ்குவாஷ்) போட்டியில் சிங்கப்பூரின் 12 வயது கரீனா சஷிகுமார் சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அப்பட்டத்தைக் கைப்பற்றியுள்ள முதல் இளவயது சிங்கப்பூரர் இவர்தான்.
சீனாவின் சிச்சுவான் மாநிலம், பான்ஸிஹுவாவில் நடைபெற்ற அப்போட்டித் தொடரில், முதல்நிலை ஆட்டக்காரரான கரீனா ஓர் ஆட்டத்தைக்கூட இழக்காமல் ஆதிக்கம் செலுத்தினார்.
இறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீராங்கனையான ரியோ யோஷினோவை 11-2, 11-3, 11-1 என்ற புள்ளிக் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தி, 13 வயதிற்குட்பட்ட சிறுமியர் பிரிவில் பட்டத்தைத் தனதாக்கினார் கரீனா. இப்போட்டி 15 நிமிடங்களிலேயே முடிந்தது.
வெற்றிப் புள்ளியை எட்டியதும் பெருங்குரலெடுத்து அழுது அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளி மாணவியான கரீனா.
“இந்த வெற்றியும் இறுதிப் போட்டியில் எனது செயல்பாடும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடருக்காக நான் கடுமையாக உழைத்தேன். பேராதரவாக இருந்துவரும் என் பயிற்றுநர்கள், பெற்றோர் மற்றும் சிங்கப்பூர்ச் சுவர்ப்பந்துச் சங்கத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த வெற்றி, 2027 ஜனவரி மாதம் பிரிட்டிஷ் இளையர் பொது விருதுப் போட்டியில் இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்கு ஊக்கமளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
