நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு தீர்வு காணவேண்டும். ஆனால், பிரதமர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மறுபுறம்இ ஜனாதிபதி அறுகம்குடாவுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் – இவ்வாறு சாடியுள்ளார் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்.
கொழும்பு – பத்தரமுல்லையிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்சொன்னவாறு அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக ஆபத்தான முறையில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டில் டொலரின் மதிப்பு அதிகரித்ததற்கு கோவிட் நெருக்கடி, சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் வருகை இன்மை போன்ற நியாயமான காரணங்கள் இருந்தன. அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களை பணம் அனுப்ப வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி கோரியிருந்தமையும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
ஆனால்இ இன்று கோவிட் நெருக்கடி இல்லை. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் இந்த அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. நிலக்கரி ஊழல் காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவிலான டீசலை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
இந்த நிலக்கரி மற்றும் டீசல் ஊழல்களே பொருளாதார வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டில் இருந்த முதலீட்டாளர்களையும் விரட்டியடித்தது. கடந்த ஒரு வருடமும் 8 மாத கால ஆட்சிக்குள், நாட்டிற்கு ஒரு டொலரேனும் கொண்டு வரக்கூடிய ஒரு முதலீட்டாளரைக்கூட ஈர்க்க இந்த அரசாங்கம் தவறியுள்ளது.
நாடு இத்தகைய பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியும் பிரதமரும் இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். ஆனால், பிரதமர் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அது ஒரு பொழுதுபோக்கு பயணமா? அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏதேனும் முதலீடுகளை கொண்டுவரும் பயணமா? மறுபுறம், நாடு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி அறுகம்குடா பகுதிக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஜனாதிபதி பொருளாதார நிபுணர்களையும் பேராசிரியர்களையும் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், விவசாயிகளுக்கு உரம் இன்றி, அத்தியாவசிய பொருட்களின் விலை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், ஜனாதிபதி சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அழைத்து, அரசாங்கத்தின் திறமையின்மையை மறைத்து எவ்வாறு பொய்களை பரப்புவது என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
எனவே, இந்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற தன்மையின் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைக்கப்பட்டுள்ளது – என்றும் குற்றஞ்சாட்டினார்.
