அநுராதபுரத்தில் பிக்குவால் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று புதன்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.
பௌத்த மதத் தலங்களில் அட்டமஸ்தானம் என்று அழைக்கப்படும் எட்டு புனித தலங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. இதன் தலைமை பிக்குவான தேரர் சிறுமி ஒருவரை வன்கொடுமை செய்தார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அட்டமஸ்தான தலைமை தேரர் கைது செய்யப்பட்டு, அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கை தொடர்வதில் பின்னடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறுமிக்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் ஓர் அங்கமாக வடக்கு, கிழக்கிலும் புதன்கிழமை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கில் யாழ்ப்பாணம் – நல்லூரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு, சமாந்தரமாக கிழக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் போராட்டம் நடைபெற்றது.
இந்த இரு போராட்டங்களிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
