ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக ஈரானின் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்ணிவெடிகளை வீசிக் கொண்டிருந்த ஈரான் ராணுவ படகுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பறந்த அமெரிக்க போர் விமானத்தைக் குறிவைத்து ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. மேலும் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரானின் அதிவிரைவு ரோந்து படகுகள் ஹோர்முஸ் நீரிணையில் வலம் வந்தன. இந்த ரோந்துபடகுகள் மூலம் கடலில் கண்ணிவெடிகளும் வீசப்பட்டன.
எனவே தற்காப்பு நடவடிக்கைக்காக ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ஏவுகணை தளங்களைக் குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசின. மேலும் கத்தார், பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் இருந்து ஈரானை குறிவைத்து ஹிமார்ஸ் ரக ஏவுகணைகளும் வீசப்பட்டன.
அமெரிக்க போர்க்கப்பல்களை நெருங்கி வந்த ஈரான் ரோந்து படகுகள் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் போர் நிறுத்தத்தை மீறவில்லை. தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தினோம். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் எப் 35 ரகபோர் விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளோம். அந்த நாட்டின் எம்கியூ-9 ரீப்பர் வகையை சேர்ந்த 2 டிரோன்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறோம். ஹோர்முஸ் நீரிணையை யார் நெருங்கினாலும் தாக்குதல் நடத்துவோம்.
தற்போது அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஹோர்முஸ் நீரிணை, பந்தர் அப்பாஸ் எல்லை வரம்புக்குள் மட்டுமே தகுந்த பதிலடியை கொடுத்திருக்கிறோம். இனிமேலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் தொடங்கப்படும்.இவ்வாறு ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
