நாட்டில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237ஆக அதிகரித்துள்ளது. இதனை தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, நோய் பரவுவதைத் தடுக்க, சுத்தமான குடிதண்ணீரைப் பயன்படுத்துமாறும் இயலுமானவரை எப்போதும் கொதித்தாறிய தண்ணீரை அருந்துமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் சமூக சுகாதார விசேட மருத்துவ நிபுணர் துஷானி தபாரேரா கூறுகையில்,
‘தற்போது பதிவாகும் நோயாளர்களில் பெரும்பாலானோர் வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் மூளைக்காய்ச்சல் நோயாளர்களே. இந்த நோய்த்தொற்று முதன்முதலில் ஏப்ரல் 15ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் கண்டறியப்பட்டது.
பின்னர் ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளிலும் நோயாளர்கள் பதிவாகின. இவர்களில் பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியன இருந்தால் உடனடியாக மருத்துவரின் அறிவுறுத்தலை பெறுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
