அரச புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே மனிதாபிமானமற்றமுறையில் நடத்தப்படுகிறார் என்று கூறி இன்று சத்தியாக்கிரக போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் நிலையில், அவர் நேற்று முன்தினம் முதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, சுரேஷ் சாலேக்கு ஆதரவாக சிறீ லங்கா பொதுஜன பெரமுன, விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவித்ரு ஹெல உறுமய கட்சிகள் மற்றும் பிக்குகள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



