எல் நினோ வானிலை தாக்கம் இலங்கையை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என வலுசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளது.
வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவிக்கையில்,
எல் நினோ காரணமாக நீர்மின் உற்பத்தியில் ஓரளவு பாதிப்பு ஏற்படலாம் என்றாலும் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய கணிப்புகளின்படி, நீர்மின் உற்பத்தியில் சுமார் 127 மணித்தியாலங்களுக்கு இணையான குறைவு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த பற்றாக்குறையை மாற்று வலுசக்தி மூலங்கள் மூலம் ஈடுசெய்ய முடியும் என்பதால், மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சாரத்தை சேமிப்பதற்காக மின்வெட்டு அமுல்படுத்தும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை – என்றார்.
இதேவேளை, எல் நினோ நிலைமையால் வலுசக்தி துறைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
