மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விஸா விதிமுறைகளை மீறி செயல்பட்ட மற்றும் தவறாகப் பயன்படுத்திய 62 வெளிநாட்டவரை மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 15 அன்று நடத்தப்பட்ட இந்தச் சிறப்புச் சோதனைக் நடவடிக்கை குறித்து குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் அளித்த தகவல்கள் மற்றும் உளவுத்துறை சேகரித்த விவரங்களின் அடிப்படையில், 30 அமுலாக்க அதிகாரிகள் இந்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டினர் அதிகமாகக் கூடும் இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களான மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மர அறுவை ஆலைகள் , உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் சாலையோரக் கடைகள் என மொத்தம் 17 வளாகங்கள் இந்தச் சோதனையின் போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.
இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களின் அசல் நோக்கத்திற்கு மாறாக, மலேசியாவில் பிற வேலைகளில் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது விசா நிபந்தனைகளை மீறிய கடுமையான குற்றமாகும்.
இந்தச் சோதனையின் போது, வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது மற்றும் குடிவரவு விதிமுறைகளைப் பின்பற்றியது தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, 11 முதலாளிகளுக்கு சாட்சி சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் அடுத்தகட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக புத்ராஜெயா குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாடெங்கிலும் இது போன்ற விசா முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிரான சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும், இது தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் குடிவரவுத் துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் டத்தோ ஜகாரியா ஷாபான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
