கனடாவில் இருந்து பிரிகின்றதா அல்பேர்ட்டா மாகாணம்

கனடாவின் எண்ணெய் வளம் மிக்க அல்பர்ட்டா மாகாணம், கனடா கூட்டமைப்பில் இருந்து பிரிந்து அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அல்பேர்ட்டா மாகாணத்தில் நீண்டகாலமாகவே நிலவி வரும் பொருளாதாரக் குறைகள் மற்றும் கனடா மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தி ஆகியவை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சியின் கொள்கைகளால் தங்களின் எரிசக்தித் துறை பாதிக்கப்படுவதாக அல்பேர்ட்டா மக்கள் கருதுவதே இந்தத் தீவிர பிரிவினைவாதப் போக்குக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் கனடா பொருளாதார மந்தநிலைக்குள் சென்றதைச் சுட்டிக்காட்டி, கனடா அமெரிக்காவின் “51ஆவது மாநிலமாக” மாற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அல்பேர்ட்டா பிரிவினைவாத நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார்.

ட்ரம்பின் இந்த கருத்துக்கு கனடாவின் ஒண்டாரியோ பிராந்திய முதல்வர் டக் ஃபோர்டு உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“கனடா ஒருபோதும் விற்பனைக்கு அல்ல, அது அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறாது” என்று அவர்கள் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளனர். இந் நிலையில் , அல்பேர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித், பிரிவினைவாத அமைப்புகளின் அழுத்தத்தின் காரணமாக வரும் ஒக்ரோபர் 19, 2026 அன்று அல்பேர்ட்டாவில் ஒரு முக்கிய வாக்கெடுப்பை நடத்த அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பில், அல்பேர்ட்டா கனடாவின் ஒரு மாகாணமாகத் தொடர வேண்டுமா அல்லது கனடா அரசியலமைப்பின் கீழ் பிரிந்து செல்வதற்கான சட்டப்பூர்வமான பிணைப்புடைய இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கான முதற்கட்ட சட்டக் குழுவை அரசு அமைக்க வேண்டுமா என்ற கேள்வி மக்களிடம் முன்வைக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் வலதுசாரி ‘மகா’ (MAGA) அரசியல் அலை மற்றும் தீவிர தேசியவாதக் கொள்கைகளின் தாக்கம் இந்த அல்பேர்ட்டா பிரிவினைவாத இயக்கத்தின் பின்னணியில் இருப்பதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் சில அல்பேர்ட்டா பிரிவினைவாதக் குழுக்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படும் புகார்களும் கனடாவின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

ஆயினும், சமீபத்தில் வெளியான ‘இப்சோஸ்’ மற்றும் ‘அங்கஸ் ரீட்’ ஆகிய நிறுவனங்களின் புதிய கருத்துக்கணிப்புகளின்படி, அல்பேர்ட்டா மக்கள் தொகையில் பெரும்பாலானோர் கனடாவுடன் இணைந்திருக்கவே விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles