கண்டி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.
தம்பதியர் நேற்று முன்தினம் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் யாழ். நகரப் பகுதியில் பஸ் ஒன்றினுள் வைத்து கைது செய்யப்பட்டனர் என நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜூன் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், சந்தேக நபர் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, ஹொரம்பாவ-கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பெண்களிடம் பெருமளவு பணம் மோசடி செய்ததுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வாகன இறக்குமதி தொடர்பான பல மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், அவரது மனைவிக்கும் இந்த மோசடி வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றம், புதுக்கடை நீதவான் நீதிமன்றம், திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமண வாக்குறுதியை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணம் பெற்றமை மற்றும் வாகன மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன
