பெண்ணொருவருடனான தொடர்புகள் காரணமாக, சிங்கப்பூரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் பைஷல் இப்ராஹிம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என பிரதமர் லோரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
“அவர்களது பெரும்பாலான தொடர்புகள் இணையவழிச் செய்திகள் மூலமாகவே நடந்துள்ளன,பொதுநிகழ்ச்சிகளின் இடைவேளைகளிலும் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். ” என்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வோங் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும், இது குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
“தூய்மையிலும் தூய்மையான” பிம்பத்தைக் கொண்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஆளும் ‘மக்கள் செயல் கட்சி’ (PAP), சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான அரசியல் சர்ச்சைகளால் உலுக்கப்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டில், அப்போதைய போக்குவரத்து அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரன், மலேசியக் கோடீஸ்வர ஹோட்டல் தொழிலதிபர் ஓங் பெங் செங்குடன் சேர்ந்து ஊழல் குற்றச்சாட்டிற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஓங் பெங் செங்கின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்குப் பதிலாக, வெஸ்ட் எண்ட் நாடகங்கள் மற்றும் கால்பந்து போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் உட்பட $3,80,000 சிங்கப்பூர் டாலர்களுக்கும் ($294,000) அதிகமான மதிப்புள்ள பரிசுகளைப் பெற்றதாக ஈஸ்வரன் ஒரு வருடம் கழித்துக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மிகப்பெரிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு மூத்த உறுப்பினர்கள் தங்களுக்குள் இருந்த கள்ளத்தொடர்பை ஒப்புக்கொண்டதை அடுத்து ராஜினாமா செய்தனர்.
அதேவேளையில் அரசுக்குச் சொந்தமான வீடுகளை வாடகைக்கு எடுத்த விவகாரத்தில் இரண்டு அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் மீது தவறு எதுவும் இல்லை என விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவங்கள் தனது கட்சியின் பிம்பத்தைப் பாதித்துள்ளதாக அப்போதைய பிரதமர் லீ சியன் லூங் கூறியிருந்தார்.
2006 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் பைஷல், 2025இல் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சரானார். தற்போது அவர் தனது அமைச்சரவை வழிகாட்டல் பதவியிலிருந்தும் ஆளும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
