செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 42ஆவது நாளான இன்று புதிதாக ஒரு மனித எலும்புக்கூடு மற்றும் ஒரு எலும்புக்கூட்டு குவியல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இன்று (24) அகழ்வுப் பணிகளின்போது இந்த கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 15 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்று எலும்புக்கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 437ஆவது எலும்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புகளுடன் தொடுகையுற்ற நிலையில் இரும்புத் தகடு ஒன்றும், சில ஆணிகளும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை செம்மணி மனித புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 480 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 479 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, செம்மணி அகழ்வுப் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
