தனுஷ் அரசியலுக்கு வந்தால், 2031ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் விஜய் – தனுஷ் இடையே போட்டி நிலவும் என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் கணித்துள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி கடந்த ஒரு சில நாள்களாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே, முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெளியிட்ட கணிப்பு வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி ஏன் எழுந்தது என்றால், தன் பிறந்த நாளை ஜூலை 28ஆம் திகதி கொண்டாடிய நடிகர் தனுஷ், அதனை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
வழக்கம்போல நன்றி, வணக்கம் மட்டும் சொல்லாமல், சில ரகசிய குறிப்புகளையும் தன்னுடைய ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார். “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன்” என தனுஷ் கூறியிருந்தார்.
தன் ரசிகர் மன்றத்திற்கு நோக்கம் இருப்பதாகத் தனுஷ் கூறியிருப்பது ஏன், அது என்ன நோக்கம்? அவர் அரசியலில் நுழைவாரா? அதற்கான அச்சாரமாகத்தான் இவ்வாறு பேசியிருக்கிறாரா? என்றெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கியிருந்தன.
இது ஒருபுறமிருக்க, தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்பது பற்றி தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெளியிட்ட கணிப்பு வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் என்ன சொல்கிறார் என்றால், அடுத்த 2031 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து வந்து எங்களை எதிர்பார்கள் என்று கணித்திருந்தேன். ஒருவேளை, அடுத்த தேர்தலில் விஜய் சாரை ஜெயிக்கணும்னா, திமுகவும் அ.தி.மு.கவும் கூட்டணி அமைக்க வேண்டும். இது வெறும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் மட்டும் களத்தில் இருந்தால்.
இப்போது சொல்கிறேன், என்னைப் பொருத்தவரை தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டால் தி.மு.க., அ.தி.மு.கவே இருக்காது. இரண்டாவது இடத்துக்கு தனுஷ் வந்துவிடுவார்.
ஒரு கட்டத்தில், தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் – தனுஷ் என்று போட்டி மாறும் நிலையும் ஏற்படும். அதனை தனுஷ் சார்தான் முடிவெடுக்ணும். அவரது ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறதா என்று சொன்னால், நான் தனிப்பட்ட முறையில் அவரது ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவரது ஜாதகம் பற்றி எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இதுமட்டுமே இடம்பெற்றுள்ளது. ஒரு வேளை தனுஷ் போட்டியிட்டால் அடுத்த முதல்வராவாரா? அரசியலுக்கு நிச்சயம் வருவாரா? என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
