மக்காவை குறிவைத்து ஹவுதிகள் நடத்திய டிரோன் தாக்குதல் முறியடிப்பு: சவுதி அரேபியா

இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளுளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சிப்படை சவுதி அரேபியாவையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மக்காவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர் எனவும், அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டர்க்கி அல் மல்கி தெரிவித்துள்ளார். தடைசெய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே, மக்காவுக்கு தெற்கே ஹவுதிகளின் டிரோனை சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் முயற்சியை அடுத்து, சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான மெக்கா, ஜெட்டா, தாயிப் உள்ளிட்டவற்றில் வசிக்கும் மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இப்பகுதிகள் மீது வான் தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதற்கான இந்த எச்சரிக்கை, இதற்கு முன் இல்லாதது.

இந்த தாக்குதல் காரணமாக, மதினாவில் உள்ள இளவரசர் முகமது பின் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாயோம் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கா மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலுக்கு 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டர்க்கி அல் மல்கி கூறுகையில், “இது ஒரு கொடூரமான தாக்குதல். இரண்டு புனித மசூதிகளும், யாத்ரீகர்களின் பாதுகாப்பும் மிக மிக முக்கியமானது. தாண்டக்கூடாத எல்லையைக் கொண்டவை அவை. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தயங்காது” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மக்கா மீது டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். மக்காவை குறிவைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட தேய்ந்துபோன ஒரு பொய். என்று ஹவுதி அமைப்பின் அரிசியல் பிரிவைச் சேர்ந்த ஹசெம் அல் அசாத் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles