மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நான்கு தளங்கள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர்; மேலும் 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி உள்ள பவர்லூம் (விசைத்தறி) நகரமான பாலாஜி நகரில், நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு கட்டடம் நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அந்தக் கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் 12 வீடுகள் என மொத்தம் 48 வீடுகள் இருந்தன. மேலும், உள்ளாட்சி அமைப்பால் இது ஆபத்தான கட்டடம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கட்டடத்தில் விரிசல் விழுந்து சப்தம் வந்தபோது, சில குடியிருப்பாளர்கள் கட்டடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோதே, கட்டடத்தின் ‘பி’ பிரிவு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இடிபாடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், பல குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற உதவியுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, ஆறு முதல் ஏழு பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
