பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 10 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் நேற்று இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த வெடி விபத்தானது மீதேன் வாயுவின் தேக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவசரகால மீட்புக் குழுவினர் வருகை தந்ததுடன், ஆரம்பத்தில் 07 உடல்களை மீட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து மேலும் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மீதமுள்ளவர்களைக் கண்டறிந்து மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிக்கியுள்ள அனைத்து சுரங்கத் தொழிலாளர்களும் கண்டறியப்படும் வரை மீட்புப் பணிகள் தொடரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
