எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தை பலப்படுத்துவதற்காக, திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் டிரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறுவியுள்ளது.
சீனா இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. லடாக்கின் லே பகுதிக்கு அருகில் உள்ள ஹேட்டன் விமானப்படை தளத்தில் ஏழு ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகில் 4 ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது. இவை ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் ஆகும். இதற்கு போட்டியாக இந்திய விமானப்படை ரபேல் மற்றும் சுகோய் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் 4,000 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் உள்ள சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ள சிசாங் பல்கலைக்கழகத்தில் ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா கடந்த 3-ம் தேதி திறந்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்பத்துடன் போட்டிபோடும் விதத்தில் சீனா இந்த டிரோன் ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது.
இது குறித்து இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் சுன் சியான்ஷாங் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் புதிய பாடத்திட்டங்களுக்கான சமீபத்திய ஒப்புதலைத் தொடர்ந்து, நாங்கள் இப்போது ‘பீடபூமி நுண்ணறிவு குறைந்த-உயர ட்ரோன் பயன்பாடுகள்’ என்ற பாடத்திட்டத்தையும் முறைப்படி பதிவு செய்துள்ளோம்.
வருங்காலத்தில் இந்த மையம் அதிக உயரமான ட்ரோன்களுக்கான முக்கிய தொழில்நுட்பச் சவால்களை இலக்காகக் கொண்டு செயல்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து, புவியியல் கண்காணிப்பு மற்றும் அவசரப் பொருட்கள் விநியோகம் ஆகிய வற்றிற்கான ஒருங்கிணைந்த தளங்களை இந்த மையம் உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
