தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை பொலிஸார் இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வரை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை பொலிஸார் இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பொலீஸார் அழைத்துச் செல்வதற்கு முன்னதாகவே, கைது சூழல் நிலவுவதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செயப்பட்டது.
அது இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், “உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை. அது கைதுக்கு முந்தைய நடவடிக்கைதான். அவரை தஞ்சை பொலீஸார் விசாரித்து முடித்ததும் விடுவிப்பர்,” என்றார்.
அப்போது நீதிபதி இளந்திரையன், உதயநிதியை இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்றும், அதேவேளையில் உதயநிதியும் காவல் துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்
