ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் எனவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் எனவும் ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும், அவரது மறைவு குறித்த செய்தி விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு ராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் ஈரான் உச்ச தலைவரான அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது மகனான மொஜ்தபா கமேனி சில நாள்களிலேயே உச்ச தலைவராகப் பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.
கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
அவரது நிலை பற்றி வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, மொஜ்தபா கமேனியை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினம் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் அரசுத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் மற்றும் செயல்பாடு தொடர்பாக சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் ஈரானில் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டிருந்தது.
அதேநேரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி நிறுவன நேர்காணலில், ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மேலும் குறிப்பிட்ட ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கமேனி 90% செயலிழந்துவிட்டார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை பற்றிய ஊகங்கள் தொடர்ந்து பேசப்பட்ட நிலையிலும் ஈரான் அரசு அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தனர். அவருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டதாகவும், நாட்டின் ராணுவச் செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.
தற்போது இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கமேனி உடல்நிலை குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஈரான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
