பஸ்ஸில் தொலைந்த 10 லட்சம் ரூபா சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த இ.போ.ச. சாரதி, நடத்துநர்

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பஸ் ஒன்றில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்டு, அதன் உரிமையாளரிடமே சாரியும் நடத்துநரும் நேர்மையுடன் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நேற்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட (இலக்கம் 4241) இ.போ.ச. பஸ்ஸின் மதிய சேவையின்போது பெண் ஒருவர் பயணித்துள்ளார். வட்டுக்கோட்டையில் மரணச்சடங்கு ஒன்றுக்குச் சென்றுவிட்டு, பின்னர் மற்றொரு உறவினர் வீட்டுக்குச் சென்ற பின்னரே தனது கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி காணாமல்போயிருப்பதை அவர் உணர்ந்துள்ளார்.

வழிநெடுகிலும் தேடிப்பார்த்தும் சங்கிலியைக் கண்டுபிடிக்க முடியாததால், இனி அது கிடைக்காது என்ற கவலையுடன் மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்வதற்காக அதே பஸ்ஸில் அவர் ஏறியுள்ளார். அப்போது தனது தங்கச் சங்கிலி காணாமல்போன விடயத்தை பஸ்ஸின் நடத்துநரிடமும் சாரதியிடமும் அவர் அழுதுகொண்டே தெரியப்படுத்தியுள்ளார்.

இதைக் கேட்ட அவர்கள், “நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில்தான் அந்தச் சங்கிலி கிடந்தது. அதைக் கண்டெடுத்து நாங்கள் பத்திரமாக வைத்திருக்கிறோம்” என்று கூறி, உடனடியாக அந்த நகையை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் பருத்தித்துறை பஸ் நிலையத்துக்குச் சென்றதும், பஸ்ஸைச் சுத்தம் செய்தபோது அந்தச் சங்கிலியின் ‘எஸ்’ வடிவத்திலான இணைப்புப் பகுதியையும் கண்டெடுத்து, அதனையும் அந்தப் பெண்ணிடம் பாதுகாப்பாகச் சேர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறு தாங்கள் கண்டெடுத்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகையை எவ்வித பேராசையுமின்றித் துரிதமாக உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதி மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துநர் இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் முன்மாதிரியான நேர்மைப் பண்பை பஸ்ஸில் பயணித்தவர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles