மாகாண சபைகள் தேர்தலை நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என்ற கூற்றுகளை அரசாங்கம் நிராகரிப்பதாக அமைச்சரவை பேச்சளார் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில், மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் ஜே. வி. பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறிய கருத்துத் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது. எனினும், தேர்தல் முறைமை குறித்த சட்ட ரீதியான சிக்கல்கள் தீர்க்கப்பட்டால் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் எவ்வித தடையும் இல்லை. தேவையான சட்டக் கட்டமைப்பு அமைக்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கத்தால் கூடிய விரைவில் நடத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மாகாண சபைகள் தேர்தலை தற்காலிகமாக பழைய முறையில் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. மாகாண சபைகள் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளைப் பெறும் நோக்கில் பவ்ரல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.
