அமெரிக்காவின் நியூோர்க் நகரில் இந்திய இளைஞா் ஒருவா் மா்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
குயின்ஸ் பகுதியைச் சோ்ந்த குா்தீப் சிங் என்ற 27 வயது இந்தியா், ஸ்டான்லி அவன்யூ பகுதியில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை 10 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, கொலையாளி காரில் தப்பிவிட்டாா். இருவருக்கும் இடையே இடையே ஏதோ தகராறு ஏற்பட்டதும், இதில் குா்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதும் கண்காணிப்பு கமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த காவல் துறையினா், கொலையாளியைத் தேடி வருகின்றனா். கொலைக்கான பின்னணி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
இதனிடையே, குா்தீப் சிங் கொலைக்கு வடக்கு அமெரிக்க பஞ்சாபிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பஞ்சாபிகள் அல்லது சீக்கியா்கள் மீதான வன்முறைகளின் தொடா்ச்சியே இந்தச் சம்பவம்; கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
