இந்தியா, உத்தர பிரதேச கிரேட்டர் நொய்டாவில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் எனக் கூறப்படும் இரண்டு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் ‘விஸ்வநாத் ரவல்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர்கள் என அந்நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 டிசெம்பரில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் இச்சம்பவம், ஓகஸ்ட் 4 அன்று அச்சிறுமி நொய்டா செக்டர் 63 இற்கு செல்வதற்காகப் பயணிகள் இல்லாத பேருந்தில் ஏறியபோது நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மைன்பூரி பகுதியிலிருந்து நொய்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த அச்சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட அதே நாளில், பேருந்தின் ஓட்டுநரான குல்தீப் (39), நடத்துநரான சந்தீப் (26) ஆகிய இருவரையும் டெல்லியின் திமார்பூர் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்துப் பொலிஸார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் அளித்த புகாரில், தாய் கண்டித்ததால், குடும்பத்தினரிடம் கூறாமல் நொய்டாவில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரவு 9 மணியளவில் கனமழை மற்றும் இருட்டுக்கு மத்தியில் நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் இறங்கியபோதே, தான் சேர வேண்டிய இடத்திற்கு இன்னும் செல்லவில்லை என்பதை அவர் அறிந்துள்ளார்.
மழையில் நனைந்தபடி தனியாக நின்றிருந்த அச்சிறுமி, 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல வாகனம் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்த ஸ்லீப்பர் (படுக்கை வசதி கொண்ட) ரகப் பேருந்து ஒன்று நின்றுள்ளது. அதில் பயணிகள் எவரும் இருக்கவில்லை.
தான் செல்ல வேண்டிய நொய்டா செக்டர் 63 பகுதி வழியிலேயே தாம் செல்வதாகப் பேருந்தின் நடத்துநர் கூறியதை நம்பி சிறுமி பேருந்தில் ஏறியுள்ளார். எனினும், அந்தப் பேருந்து கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூர் பகுதியில் உள்ள பணிமனையிலிருந்தே திரும்பிக் கொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடத்துனர் தன்னிடம் தவறாக நடக்கத் தொடங்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சிறுமி புகாரில் தெரிவித்துள்ளார். எதிர்ப்புக் காட்டினால் கொன்றுவிடுவதாகவும் அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு, டெல்லி காஷ்மீரி கேட் பகுதி ரிங் ரோட்டிற்கு அருகே சிறுமியை அவர்கள் வீசிச் சென்றுள்ளனர். இதனையடுத்தே சிறுமி பொலிஸில் புகார் அளிக்கவே, உடனடியாக விசாரணையைத் தொடங்கிய பொலிஸார் குற்றவாளிகளைத் தேடிப் பிடித்துள்ளனர்.
பேருந்தின் படுக்கைப் பிரிவுகளில் தொங்கவிடப்பட்டிருந்த திரைகளைப் பயன்படுத்தியே சந்தேகநபர்கள் இக்குற்றத்தைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் பேருந்திற்குள்ளிருந்து சிறுமியின் முடி இழைகளைக் கண்டெடுத்துள்ள நிலையில், பொலிஸார் பேருந்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், பேருந்து பயணித்த வழித்தடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளையும் கைப்பற்றி புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
