காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (வயது 80) உடல்நலக்குறைவால் இன்று வியாழக்கிழமை காலமானார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன நாச்சியப்பன். வழக்கறிஞரான இவர் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இவர் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2004ஆம் ஆண்டு வரை எம்.பி யாக இருந்தார். 2004 – 2016 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக 2013ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர், நாடாளுமன்ற கட்சி கொறடா உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரின் சித்தப்பா ஆவார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது உடல் இன்று மாலை சொந்த ஊரான ஏரியூர் எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இல்லத்திலிருந்து நாளை (செப். 18) மாலை 3.30 மணியளவில் நல்லடக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
