யேமனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அல்-அய்லாம் இராணுவ முகாம் மீது ஹூதி அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 53 அரச படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் ஆதரவைப் பெற்ற ஆயுதக் குழுவான ஹவுதிகள், திங்கட்கிழமை ஷப்வா மாகாணத்தில் அமைந்துள்ள குறித்த இராணுவ முகாமை இலக்குவைத்து மூன்று ஏவுகணைகளை ஏவியதாக யேமன் அரசாங்கப் படைகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதிய பாதுகாப்புப் படை ஆட்சேர்ப்பாளர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசாங்கத்தின் அதிகாரிகளும் மருத்துவத் தரப்பினரும் ஆரம்பத்தில் வெளியிட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததுடன், 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
எனினும், திங்கட்கிழமை பின்னர் வெளியான தகவல்களில் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
ஷப்வா மாகாண உள்ளூர் அதிகாரிகள் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்ததாகச் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
யேமன் முழுவதும் மோதல்கள் தொடரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
