Sangathy
News

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கான வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கத் தயார்: சீன நிதி அமைச்சர்

Colombo (News 1st) இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராகவுள்ளதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) உறுதியளித்துள்ளார்.

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று காலை பீஜிங்கில் இடம்பெற்ற போதே சீன நிதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால் தொடர்பில் தமது நாடு உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள சீன நிதியமைச்சர், இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இதுவரை இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் சீன நிதி அமைச்சர் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பணப்பரிமாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், சீனாவுடன் நெருக்கமாக செயற்படும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் சீன நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சவாலான பணியில் இலங்கைக்கு சீனா வழங்கும் தொடர்ச்சியான ஆதரவை மிகவும் பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் போட்டித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

காணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்பு

John David

Pak groups hold protest outside Indian High Commission in UK on Burhan Wani’s death anniversary

Lincoln

SJB: Has Prez made LG polls disappear?

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy