நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார். இதனால் பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 2 வருடங்களில் நாட்டின் மருந்துகளுக்கான தேவையில் 70 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார். நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றிற்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க கூறினார்.
Colombo (News 1st) இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை (Nuclear Power Plant) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
110 மெகாவாட் அணு மின் உற்பத்தி நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுமாயின், அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்.
இதற்கு தேவையான எந்தவொரு கலந்துரையாடலுக்கும், விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.