Sangathy
InternationalWorld Politics

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்..!

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது.

மேலும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களும், சோசலிசக் குழுக்களும் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஆதரவான நாளாக மே 1-ஐ அறிவித்ததை தொடர்ந்து இந்த நாள் தொழிலாளர் இயக்கத்துடன் தொடர்புடைய நாளாக மாறியது. கடந்த 1886-ஆம் ஆண்டில் மே முதல் நாள் அமெரிக்காவின் பிற நகரங்களில் நடைபெற்றது போலவே சிகாகோ நகரிலும் எட்டு மணி நேர வேலை நாள் கோரி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்றது.

இதனை அடுத்து பொலிஸார் போராடிய தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. சில தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. இதனை கலைக்க வந்த பொலிஸார் மீது குண்டு ஒன்று வீசப்பட தொழிலாளர் மீதான அடக்குமுறை தீவிரமானது. இறுதியில், வன்முறை முடிவதற்குள் 7 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர். நான்கு முதல் எட்டு பொதுமக்கள் இறந்ததாகவும், 30 முதல் 40 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையிலேயே ‘உழைப்பாளர் நாள்’ மே 1-ம் திகதி அனுசரிக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகளை அனுபவித்தவர்கள், குறைந்த ஊதியம் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்றவற்றை அனுபவித்தனர். மேலும் பொலிஸ் தாக்குதலில் உயிர்விட்டவர்கள் அனைவரும் ஹேமார்க்கெட் தியாகிகள் என போற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹேமார்க்கெட் விவகாரம் தொழிலாளர் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை சூழல் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்க உதவியது.

பலகட்ட உரிமைக்குரல்ககளை தொடர்ந்து 1894-ஆம் ஆண்டில் தொழிலாளர் தினத்தை அரசு விடுமுறையாக அமெரிக்கா முறையாக அங்கீகரித்தது. மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. கனடாவும் இதைப் பின்பற்றியது. எனினும் நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பதை அங்கீகரிக்க அமெரிக்காவிற்கு இதனை தொடர்ந்து எழுந்த எண்ணற்ற எதிர்ப்புகளுக்கு அடுத்து சுமார் 22 ஆண்டுகள் தேவைப்பட்டது.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை தொழிலாளர் தினமாக அனுசரித்தாலும், மற்றவர்கள் அந்த நிகழ்வை வேறு தேதியில் கொண்டாட முடிவு செய்தனர். கடந்த 1889-ஆம் ஆண்டில், சோசலிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் அமைப்பான Second International, இனி மே மாதம் முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. தொழிலாளர் தினத்தின் முதல் அதிகாரப்பூர்வ கொண்டாட்டம் ஒரு வருடம் கழித்து 1890-ல் தொடங்கியது.

தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு கற்பிப்பதோடு, அதிகார வர்க்கத்தினரின் சுரண்டல்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 1917-ல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு பிளாக் நாடுகளால் தொழிலாளர் தின கொண்டாட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல நாடுகளில் மே 1 தேசிய விடுமுறையாக மாறியது. அணிவகுப்புகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

Related posts

Sex Trafficker Empstein’s legacy continues…

Lincoln

ட்ரம்ப் மீதான தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்..!

Lincoln

கட்டாய மதமாற்றத்தில் இந்துப் பெண்கள் : பாகிஸ்தானில் நடக்கும் அவலம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy