பெங்களூருவில் நேற்று கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாய் காட்சியளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த சூழலில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம், சுமார் 5 மாதங்களாக எட்டிப் பார்க்காத மழை, வாட்டி வதைக்கும் வெயில் என நிலைமை நெருக்கடியாக காணப்பட்டது. ஜில்லென இருக்கும் பெங்களூரு கிளைமேட் வெப்பத்தால் தகித்தது. இதனால் ஏசியை எட்டி கூட பார்க்காத சில பெங்களூருவாசிகள், ஏசி வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். ஆனால் டிமாண்ட் அதிகமாக இருந்த நிலையில் கடைகளுக்கு வந்து சேரவே ஒருவாரம் ஆகும் என்று கைவிரித்து விட்டனர்.
இதனால் தங்கள் சொந்த ஊர்களில் ஆர்டர் செய்து பெங்களூருவிற்கு கொண்டு வரும் பிளானில் இறங்கினர். இதை சிலர் சாத்தியப்படுத்தியும் காட்டினர். இவை அனைத்தும் ஒரு வாரத்திற்கும் முன்பிருந்த நிலை. தற்போது திரும்பிய பக்கமெல்லாம் மழை. கடந்த ஒருவார காலமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. 38, 39 டிகிரியாக இருந்த வெப்பநிலையில் 36, 35 டிகிரிக்கு குறைத்துவிட்டது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதுதான் உண்மையான பெங்களூரு என்று பொதுமக்கள் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர். அதிலும் நேற்றைய தினம் (மே 8) கொட்டித் தீர்த்த மழையால் நகரின் பல இடங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன. பெங்களூருவில் நேற்று 17.9 மில்லிமீட்டர் மழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹெச்.ஏ.எல் பகுதியில் 5.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஆர்.டி.நகர், எலஹங்கா, சாரதா காலனி, ஹெப்பல் சர்க்கிள், பென்னிகானாஹள்ளி ரயில்வே பாலம், ஜெயாமஹால் ரோடு, வீரன்னா பால்யா உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததாக 150க்கும் மேற்பட்ட புகார்கள் மாநகராட்சிக்கு குவிந்துள்ளன.
தகவல் கிடைத்ததும் சுமார் 50 இடங்களுக்கு மீட்பு படையினர் விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். குறிப்பாக ஆர்.ஆர்.நகரில் அதிகபட்சமாக 70 மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தை ஒட்டி காற்றழுத்த சுழற்சி காணப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் மேலே எழும்பக் கூடும்.
இதன் காரணமாக கடலோர மற்றும் தெற்கு உட்புற கர்நாடகாவில் மழை பெய்யக்கூடும். தற்போதைய வானிலை நிலவரத்தின் படி, அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மே 11ஆம் திகதி வரை கடலோர மற்றும் தெற்கு உட்புற கர்நாடகாவில் பரவலான மழை பெய்யக்கூடும். கர்நாடகா முழுவதும் மே 12ஆம் திகதி முதல் பல்வேறு இடங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.