காஸாமீது கடந்த 24 மணி நேரத்தில் பல தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.காஸாவின் தெற்கு பகுதியில் அகதிகள் முகாம்மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.எனினும், இன்னமும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் கான் யூனிஸ் பகுதியில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளன. இதில், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், இன்று அதிகாலை இஸ்ரேல் படைகள் மேற்கு கரையின் நப்லஸில் உள்ள பலஸ்தீனர்களின் வீடுகளை சோதனையிட்டன. இதன்போது பலர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அந்தப் பகுதியில் புதிய காவலரண்களை அமைத்துள்ளன என்றும் தெரியவருகிறது.
2025 ஒக்ரோபரில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் இதுவரை 906 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்து 747 பேர் காயமடைந்தனர் என்று காஸா சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, காஸாமீதான இஸ்ரேலின் போரால் இதுவரை 72 ஆயிரத்து 775 பேர் உயிரிழந்தனர். ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 750 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
