மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் தஞ்சோங் செப்பாட் கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு இந்தோனேசியர்களை பொலிஸார் கைது செய்ததுடன், சுமார் 4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளாக இருந்த 30 வயதுக்கு மேற்பட்ட இரு சந்தேக நபர்களும், நாட்டை விட்டு தப்பிச் செல்ல படகுக்காகக் காத்திருந்தனர் என நம்பப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் பொதுப்படை போலீஸ் பிரிவு மேற்கொண்ட திடீர் சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சோங் செப்பாட் பகுதியில் உள்ள கடற்கரை அருகே, பெரிய குழாய் அமைப்பின் பக்கத்தில் புதர்பகுதியில் மறைந்து இருந்தபோது அவர்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இடம் PGA Ladang Tumbok முகாமிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.
மத்திய பிரிகேட் PGA தளபதி கூறுகையில், சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த இடத்தில் மேற்கொண்ட சோதனையில் சுமார் 88.989 கிலோ எடையுள்ள ‘ஷாபு’ வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
