இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இலங்கை ஆட்சியாளர்கள்மீதிருந்த சந்தேகமே விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு வழங்கும் நிலையை அவர் எடுத்ததற்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவு பெரும் விரிசலுக்கு உள்ளாகியிருந்தது. அதற்கு பிரதான காரணம், அவர் அமெரிக்காவுடன் மிக நெருக்கம் காட்டியமையாகும். ஒரு சிறிய நாடு தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளும்போது எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு, திருகோணமலை விவகாரம் ஒரு கசப்பான வரலாற்று பாடமாகும். இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை மையமாகக் கொண்டே அப்போதைய இந்தியத் தலைமை தீர்மானங்களை எடுத்தது.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளைப் பராமரிப்பது தொடர்பான விவகாரம் மற்றும் ‘வொய்ஸ் ஒவ் அமெரிக்கா’ வானொலி நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்கும் முயற்சி போன்றவை, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமென அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கருதினார். இந்தச் சந்தேகமே, இந்திய அரசாங்கம் அக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு மற்றும் பயிற்சி வழங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறினார்.
சம்பிக்க ரணவக்க எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில், விருந்தினராக பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
