நடப்பு ஆண்டுக்கான ஐ. பி. எல். தொடரில் இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இறுதிப் போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி இந்த சாதனையை அந்த அணி படைத்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆர்.சி. பி. அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர். சி. பியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 10 ஓட்டங்கள் மற்றும் சாய் சுதர்சன் 12 ஓட்டங்கள் என பவர்பிளேயிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
எனினும், சகலதுறை வீரர் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி 37 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து அணிக்கு முட்டுக்கொடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஆர். சி. பி. தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராசிக் சலாம் 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர். சி. பி. அணிக்கு விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் 32 ஓட்டங்கள்ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இறுதிப்போட்டியில் விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி, வெறும் 25 பந்துகளில் ஐ. பி. எல் வரலாற்றில் தனது அதிவேக அரைச்சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார்.
ரஷித் கான் 2 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
எனினும், இறுதிவரை களத்தில் நின்ற கோலி 42 பந்துகளில் 9 பௌண்ட்ரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 75 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆர். சி. பி. அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்து, 12 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
