பிரிட்டனின் லண்டன் நகரில் 26 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு லண்டனின் சவுத்தால் பகுதியில் உள்ள நோர்த் வீதி மற்றும் டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்தியில் அருகேயுள்ள கடை ஒன்றுக்கு வெளியே புதன்கிழமை நள்ளிரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் குர்பேஜ் சிங் என்ற 26 வயது இளைஞர் உயிரிழந்தார். அவருடன் இருந்த 30 வயது மதிக்கத்தக்க மற்றொருவரும் காயமடைந்துள்ளார்.
கத்திக்குத்துக் காயங்களுடன் இருந்த குர்பேஜ் சிங்கின் உயிரைக் காப்பாற்ற மருத்துவ குழு தீவிரமாக முயன்ற போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
காயமடைந்த மற்றைய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வெளியேறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் ஆறு பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, உயிரிழந்த குர்பேஜ் சிங்கின் குடும்பத்தினருக்கு சிறப்பு காவல் அதிகாரிகள் தேவையான உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
