பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலேவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சாலேவை அவரின் மனைவியும் மகனும் இன்று – ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்துள்ளனர்.
சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவரது மனைவி,
சுரேஷின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. முன்பு படுக்கையில் உட்கார்ந்தபடியாவது பேச முடிந்த நிலையில் இருந்த சுரேஷ், தற்போது உட்காரக்கூட சக்தியற்ற நிலையில் உள்ளார்.
அவருக்கு காய்ச்சலும் தொற்றுநோயும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரு கைகளிலும் வீக்கம் காணப்படுகிறது. தொடர்ச்சியான சிகிச்சைகளால் உடல் மிகவும் பலவீனமடைந்துள்ளது.
பேசுவதற்கே பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வார்த்தைகளை உச்சரிக்கவே கடினமாக உள்ளது. கடந்த சுமார் 8 நாட்களாக அவர் ஒரு துளி தண்ணீரும் அருந்தவில்லை, உணவும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமானது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுரேஷ் சாலேவின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்து தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
