கேரளமானிலத்தின் காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள பொது மயானத்தில், கடந்த வெள்ளிக் கிழமையன்று நாராயணன் (64) என்ற ஆதரவற்ற முதியவரின் உடலுக்குத் தீ மூட்டி இறுதிச் சடங்குகளைச் செய்தார் முஸ்லிம் பெண் ஒருவர். இரண்டு நாள்களாக உறவினர்கள் யாரும் உடலைப் பெற்றுக் கொள்ளாததால் இந்த நற்செயலைச் அவர் செய்துள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியுமானவர் இர்பானா இக்பால் (வயது 34) இந்தச் செயலை செய்துள்ளார்.
காசர்கோடு மாவட்டத்தின் மீஞ்சா பஞ்சாயத்துப் பகுதியைச் சேர்ந்தவர்தான் நாராயணன். இவருக்கு இரண்டு மனைவிகளும், அவர்கள் மூலம் குழந்தைகளும் உள்ளனர். எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாராயணனைக் குடும்பத்தினர் முற்றிலுமாகக் கைவிட்டனர்.
இந்நிலையில் தான், மஞ்சேஸ்வரம் பகுதியில் இர்பானா இக்பால் நடத்தி வரும் ‘ஷேக் சையத் பவுண்டேஷன்’ ஆதரவற்றோர் இல்லம் நாராயணனை மீட்டுத் தஞ்சம் அளித்தது.
இதுகுறித்து இர்பானா இக்பால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த மாதம் நாராயணன் அண்ணனை நான் தெருவிலிருந்து மீட்டபோது, அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று உள்ளூர் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன்.
அவர் உயிரிழந்த பிறகும் என்னால் அவரைக் கைவிட முடியவில்லை. ஒரு மகளாக நின்று நாராயணன் அண்ணனின் இறுதிச் சடங்குகளை நான் நிறைவேற்றியுள்ளேன். மதங்களுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது மனிதநேயம். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
