ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின் பிரதிநிதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல்களே மொஜ்தபா கமேனி பங்கேற்க முடியாததற்குக் காரணம் என்று அயதுல்லா ஹக்கீம் எலாஹி ‘இந்தியா டுடே’ ஊடகத்திடம் கூறியுள்ளார்.
கமேனி “கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளார்” என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அண்மையில் அச்சுறுத்தியிருந்தார்.
இதற்கு ஈரானிடமிருந்து கடுமையான பதில் வந்தது. இனிவரும் அச்சுறுத்தல்களுக்கு “வலுவான பதிலடி” கொடுக்கப்படும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரித்தார்.
ஈரான் மீதான போரின் தொடக்கத்தில், பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளால் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.
அவருக்குரிய இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான வடகிழக்கு நகரமான மஷாட்டில் (Mashhad) அடக்கத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
