சவர்காரத்துக்குள் ஹெரோயின் மறைத்து, யாழ்ப்பாண நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை இரகசியமான முறையில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பொதிகள் சேவை ஊடாக வரவழைக்கப்பட்ட வாசனை சவர்காரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர், 2023 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த மாதமும் சிறியளவிலான போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
