சீன நாட்டவருக்குச் சொந்தமான 2கோடி ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (22) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டிய பொலிஸில் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்தபோது சரணடைந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டியில் வாகனத்தில் பயணித்த சீன நாட்டவர் ஒருவரைப் பொலிஸார் போன்று நடித்து வழிமறித்த இருவர், அவரது பயண ஆவணங்களைச் சோதனையிட்டதுடன், 2 கோடி ரூபாய் பணம் அடங்கிய பையுடன் தப்பியோடினர். இச்சம்பவம் சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.
அருகில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இச்சம்பவத்தை நேரில் கண்டு, சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
தான் தனியாகவே செயற்பட்டார் என அவர் ஆரம்பத்தில் தெரிவித்த போதிலும், மேலதிக விசாரணைகள் மற்றும் தொலைபேசிப் பகுப்பாய்வு மூலம் மேலும் நான்கு சந்தேக நபர்களைப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு சீன நாட்டவர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட பணத்தைப் பகிர்ந்தளிப்பதற்காக சாந்த பண்டாரவின் மகனும் ஏனையோரும் அருகில் காத்திருந்தனர் எனவும், கைது நடவடிக்கைகள் குறித்து அறிந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
