14 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு

உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த 10 மலையேற்ற வீரர்களும் உயிரிந்தனர்.

“புரோட் பீக் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து நிர்மல் ‘நிம்ஸ்டாய்’ புர்ஜா துரதிர்ஷ்டவசமாக தனது உயிரை இழந்துவிட்டார் என்பதை அளவற்ற துயரத்துடனும் உடைந்த இதயத்துடனும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவரது மலையேற்றப் பயணத்தை ஒழுங்கமைத்த ‘எலைட் எக்ஸ்பெட்’ (Elite Exped) நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

“இந்த மலையேற்றப் பயணத்தில் பங்கேற்ற மற்ற உறுப்பினர்களும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என்ற உறுதியான தகவலும் எங்களுக்குக் கிடைத்துள்ளது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்ஜா உட்பட மலையேற்ற வீரர்களின் உயிரிழப்பைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கில்கிட்-பால்திஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ள, தொழில்நுட்ப ரீதியாக ஏறக் கடினமான, உலகின் 12ஆவது மிகயுயர்ந்த சிகரமான 8,051 மீட்டர் (26,414 அடி) உயரமுடைய ‘புரோட் பீக்’ சிகரத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 43 வயதான புர்ஜாவும் மேலும் ஒன்பது பேரும் காணாமல் போயிருந்தனர்.

புர்ஜா மற்றும் பிற மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்பதற்குக் கடினமான ஒரு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் சிறப்புப் படைகளிலும் பணியாற்றிய புர்ஜா, 2019ஆம் ஆண்டில் தனது சாதனைப் பயணத்தை வெறும் ஆறு மாதங்களில் நிறைவு செய்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான “14 பீக்ஸ்: நத்திங் இஸ் இம்பாசிபிள்” என்ற நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஆவணப்படத்திற்குப் பிறகு அவர் சர்வதேச அளவில் பரவலாக அறியப்பட்டார்.

புர்ஜா மற்றும் பிற மலையேற்ற வீரர்களின் மரணச் செய்தியைக் கேட்டுத் தான் “மிக்க அதிர்ச்சியும் துயரமும்” அடைந்ததாகக் பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை நண்பகலில் ஏற்பட்ட பனிச்சரிவில் இந்த 10 மலையேற்ற வீரர்களும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் அறுவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பாகிஸ்தான், ஓமன், அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles