திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சேருநுவர – சோமபுர பகுதியிலுள்ள வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து கடமையில் ஈடுபட்டுவந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர், கடந்த வியாழக்கிழமை யானை மின்வேலி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளார்.
யானையின் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டுத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சேருநுவர – சோமபுர எல்.பி. – 01 பகுதியைச் சேர்ந்த எம்.எம். டில்சான் (வயது 38) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த சேருநுவரப் பொலிஸார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
