கனடாவில் இந்தியப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 மாதங்களுக்குப் பிறகு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் ரொறன்ரோவில் உள்ள வீட்டில் இருந்து 30 வயதான ஹிமான்ஷி குரானா என்ற பெண் கடந்த டிசம்பர் மாதம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ய பொலீஸார், இதுதொடர்பாக அவருடன் நெருங்கிய உறவில் இருந்த அப்துல் கஃபூரி(32) என்பரைத் தேடி வந்தனர்.
மேலும் கடந்த ஆண்டே அப்துலை கைது செய்ய கனடா சட்ட அமலாக்கத் துறை நாடு தழுவிய பிடியாணையும் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் அவர் கனடாவுக்குத் திரும்பியபோது ரொறன்டோ விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார் என சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
கைதான இளைஞர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமறைவாக இருந்த அப்துல் கனடா அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும், அவர் எந்த நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டார் என்ற விவரத்தை பொலிஸ் தரப்பு வெளியிடவில்லை.
