மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வோர்னருக்கு 1500 ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

39 வயதான டேவிட் வோர்னர், இந்த ஆண்டின் ஈஸ்டர் வாரயிறுதி விடுமுறையின் போது சிட்னியின் மாரூப்ரா பகுதியில் காவல்துறையின் திடீர் மூச்சுப் பரிசோதனைச் சாவடிக்கு அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில் மது அருந்தியிருந்தமை உறுதிசெய்யப்பட்டதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில் அவரது இரத்தத்தில் மதுவின் அளவு 0.104 ஆகப் பதிவாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் வோர்னர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இவ்வழக்கு வெய்வர்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வோர்னரின் வழக்கறிஞர் அவாயிஸ் அகமட் –

“சமூக நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் வோர்னர் வாகனத்தைச் செலுத்தத் தீர்மானித்தமை ஒரு தவறான, அவசரமான மற்றும் புத்தியீனமான முடிவாகும்” எனத் தெரிவித்தார்.

வோர்னர் தனது தவறை உணர்ந்து, போக்குவரத்து விதிமீறுபவர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சியையும் நிறைவு செய்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வோர்னரின் இச்செயலால் அவரது வருங்கால தொழில் வாய்ப்புகள் மற்றும் வணிக ரீதியான ஒப்பந்தங்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அவருக்கு குற்றவியல் தண்டனைப் பதிவைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், அரசுத் தரப்பு காவல்துறை சமேத சார்ஜன்ட் ஏட்ரியன் வால்ஷ் , வோர்னரின் இரத்தத்தில் பதிவான மதுவின் அளவு 0.104 ஆக உள்ளமையையும், அவர் ஏற்கனவே 10 முறை வேகக் கட்டுப்பாடு மீறல் மற்றும் 3 முறை வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், துடுப்பாட்ட உலகில் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழும் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது சமூகத்திற்குத் தவறான முன்மாதிரியாகிவிடும் என்றும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி , நிகழ்வொன்றில் மூன்று கிளாஸ் வைன் அருந்திய பின்னர் வோர்னர் தனது குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றுள்ளதையும், பரிசோதனைச் சாவடியைக் கண்டதும் ஓட்டுநர் இருக்கையிலிருந்து பயணி இருக்கைக்கு மாற முயன்றதையும் காவல் அறிக்கை சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்தார்.

இறுதியில், வோர்ணரின் மனந்திருந்திய நிலை மற்றும் அவர் மேற்கொண்ட சிகிச்சைகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு 1,500 ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles