மலேசியாவின் சபா, கோத்தா கினபாலு அருகே நும்பாக் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200 இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட 3 சிறுவர்கள் தீயில் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் நானா அப்துல்லா (4), முகமட் அஸ்ருல் அப்துல்லா (6) மற்றும் நுர்ஃபராஹ்திலா முகமட் தாஜிஹா (8) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சபா மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தீ விபத்து நும்பாக் பகுதியிலுள்ள கம்போங் லோக் புத்தா, கம்போங் லோக் போரிங் மற்றும் கம்போங் சபாங் லாமா ஆகிய மூன்று நீர்மேல் மிதக்கும் குடிசைப் பகுதிகளை சூறையாடியுள்ளது.
முன்னதாக இச்சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் காணாமல் போனதாக அஞ்சப்பட்ட நிலையில், பின்னர் மீட்புப் படையினரால் அவர்களின் சடலங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வீடுகளின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் ஏனைய விவரங்கள் குறித்துத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.
