அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில் கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதனால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினமும் சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவு செய்யக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வீரர்களின் வருகையால் சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் பெலிஸாரிடம் உள்ளது.
இதையடுத்து கடற்கரை மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 40 முதல் 50 பேர் பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு சுற்றுலாவுடன் பட்டாயாவுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. தற்போது 200 நாட்களுக்கும் மேலாக கடலில் இருந்த USS Abraham Lincoln வீரர்களின் வருகை, நகரின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
